சென்னை விமான நிலையத்தில் அந்தமான் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் முயற்சியால் மாற்று ஏற்பாடு

அந்தமானுக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜனின் முயற்சியால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2018-07-04 22:15 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து அந்தமானுக்கு வேலைக்கு சென்று அங்கேயே வசிக்கும் 80-க்கும் மேற்பட்டவர்கள் விடுமுறைக்காக கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

விடுமுறை முடிந்து குழந்தைகளுடன் சென்னையில் இருந்து அந்தமானுக்கு திரும்பிச் செல்ல 80 பேர் ஏர்-இந்தியா விமானத்தில் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பதிவு செய்து இருந்தனர். இதற்காக 80 பேரும் நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர்.

பின்னர் ஏர்-இந்தியா அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, “உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள். விமானம் பற்றிய தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், “விமானம் ரத்து செய்யப்பட்ட தகவலை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்காதது ஏன்?” என்று கேட்டனர். உடனே அதிகாரிகள், “இதுபற்றி ஏஜெண்டுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். உங்களுக்கு தேவை என்றால் டிக்கெட் பணத்தை திருப்பித் தருகிறோம்” என்றனர்.

இதை கேட்டதும் மேலும் ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான நிலையத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிலையத்துக்கு வந்த தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக ஏர்-இந்தியா அதிகாரிகளிடம் பேசி, ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “உங்களை ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், நாளை (அதாவது இன்று) அந்தமான் செல்லும் விமானத்தில் அனைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக”கூறினார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பயணிகள், தமிழிசை சவுந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்