‘சீல்’ வைக்கப்பட்ட குட்கா குடோனின் பூட்டை உடைக்க முயன்ற உரிமையாளர் கைது

ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களுடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்த குட்கா குடோனின் பூட்டை உடைக்க முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-04 23:15 GMT
கோவை,

கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையா ராஜபுரத்தில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அந்த வீட்டுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 40 பெட்டிகளில் ஹான்ஸ், 36 மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் உள்பட 1500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.

கோவை உப்பரா வீதியை சேர்ந்த அசோக்(வயது 40) என்ற வியாபாரிதான் இந்த வீட்டை குட்கா குடோனாக பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகள் குடோனில் சோதனைக்கு சென்றபோது அசோக் அங்கு இருந்துள்ளார். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை கண்டதும் அவர் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அதிகாரிகள் குட்கா குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர். குட்கா பதுக்கியது தொடர்பாக குடோன் உரிமையாளர் அசோக்கிடம் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால், அவரை கண்டு பிடித்து தருமாறு உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் செல்வபுரம் போலீசார் அசோக்கை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் சீல் வைக்கப்பட்ட குடோன் முன்பு ஒரு கும்பல் காருடன் நிற்பதை கண்ட ரோந்து போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களான காசி விஸ்வநாதன், சுரேஷ், பாபு, சலீம், அஸ்ரப் என்பது தெரிய வந்தது.

குடோன் உரிமையாளர் அசோக்தான், பொருட்கள் ஏற்ற வேண்டும் எனக்கூறி இவர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் தொழிலாளர்கள் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து பொ ருட்களை ஏற்ற முடியாது என மறுத்துள்ளனர். அவர்களிடம் அசோக், நான் சீலை உடைத்து பொருட்களை எடுத்துக் கொள்கிறேன் என கூறி சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மூலமாக அசோக் கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவரை வரவழைத்தனர். அவர் ‘சீல்’ வைக்கப்பட்ட குட்கா குடோனின் பூட்டை உடைக்க முயன்ற போது அங்கிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் எங்கிருந்து குட்கா பாக்கெட்டுகளை வர வழைத்தார்? கோவையில் குட்கா தயாரிக்கப்படுகிறதா? யார்- யாருக்கு வினியோகம் செய்வதற்காக இவ்வளவு மூட்டைகளை பதுக்கி வைத்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்