உசிலம்பட்டியில் குடிநீர், அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் குடிநீர், அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24-வது வார்டில் உள்ளது கவணம்பட்டி. இங்கு வளர்ந்து வரும் புதிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக குடிநீர், சாலைவசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்தநிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு தலைமையில், ஒன்றியசெயலாளர் ராமர், ஒன்றியக்குழு உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன், டி.எஸ்.பி. கல்யாண குமார், நகராட்சி ஆணையாளர் சுப்பையா, ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இன்றே நடவடிக்கை எடுத்து இன்னும் 3 தினங்களில் குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகள் சரிசெய்யப் படும். மின்சாரம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அந்த துறையினரைத்தான் அணுக வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அதன் பின் சாலை மறியலை கைவிட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் இதுபோல பலமுறை வாக்குறுதி கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடரும் பட்சத்தில் கவணம்பட்டி பொதுமக்கள் சமையல் பாத்திரங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் குடியேறி கோரிக்கை நிறைவேறும் வரை குடியிருந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.