மைனர் பெண்ணை கடத்தி உல்லாசம் அனுபவித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் வலைவீச்சு

ஹனூர் தாலுகாவில், மைனர் பெண்ணை கடத்தி மணந்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-07-04 21:30 GMT

கொள்ளேகால்,

ஹனூர் தாலுகாவில், மைனர் பெண்ணை கடத்தி மணந்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மைனர் பெண்

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா எகத்தாப்புரா கிராமத்தில் இருந்து கடந்த மாதம்(ஜூன்) 30–ந் தேதி ஒரு மைனர் பெண் காணாமல் போயிருந்தார். இதுதொடர்பாக அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் ராமபுரா போலீசில் புகார் செய்திருந்தனர். அதில் தங்களுடைய மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது காணாமல் போன மைனர் பெண்ணுக்கும், சிகதாபுரா கிராமத்தைச் சேர்ந்த தன்வீர் பாஷா(வயது 20) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

வீட்டைவிட்டு வெளியேறி...

ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மைனர் பெண்ணும், அவருடைய காதலனும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் 30–ந் தேதி அந்த மைனர் பெண்ணும், அவருடைய காதலன் தன்வீர் பாஷாவும் வீட்டைவிட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் மைசூருவுக்கு சென்றுள்ளனர்.

மைசூருவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதையடுத்து அவர்கள் மைசூருவிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்து தங்கியுள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் மைசூருவுக்கு சென்று அந்த மைனர் பெண்ணை மீட்டனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த தன்வீர் பாஷா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் தன்வீர் பாஷா அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து இருந்ததால், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்