ஆசனூர் அருகே சாலையோரங்களில் உலா வரும் யானை கூட்டம்

ஆசனூர் அருகே சாலையோரங்களில் யானைகள் கூட்டம் அதிக அளவில் உலா வருகின்றன. அதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Update: 2018-07-04 22:00 GMT
பவானிசாகர்,

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மரம், செடி-கொடிகள் மற்றும் புற்கள் அதிகஅளவில் வளர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் அதிகஅளவில் செடி-கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்படுகின்றன.

இதனால் பசும்புற்களை உண்ண யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் உலா வருகிறது. நேற்று ஆசனூர் மெயின் ரோட்டின் ஓரத்தில் யானைகள் கூட்டமாக நின்றன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களுடைய செல்போன் மற்றும் கேமராக்களில் யானைகளை படம் பிடித்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி அருண்லால் கூறுகையில், ‘ஆசனூர் வனப்பகுதி தற்போது பசுமையாக காணப்படுகிறது. இதனால் யானைகள் அடிக்கடி சாலையோரங்களில் நடமாடுவதோடு, சாலையை கடக்கிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து ஆசனூர் சோதனைச்சாவடி வரை வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.

மேலும், மான்களும் அடிக்கடி சாலையை கடக்கும். வாகனங்களில் மான்கள் அடிபட வாய்ப்பு உள்ளது. யானைகள் சாலைகளில் நிற்பதை கண்டால் வாகனங்களை துரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். யானை சென்றபின்புதான் அங்கிருந்து வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். குறிப்பாக யானை அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்யவேண்டாம். தற்போது யானைகள் கூட்டமாக சாலையோரங்களில் நிற்கின்றன. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்