காவிரி ஆணையம் உத்தரவு அமலாக்கப்படுமா?

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை அமைப்பதற்கான அரசாணையை கடந்த 1-6-2018 அன்று வெளியிட்டது.

Update: 2018-07-04 05:49 GMT
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஆணையத்தின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கர்நாடகம் தமிழகத்துக்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

காவிரி தீர்ப்பாயத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், பக்ராநங்கல் மேலாண்மை வாரியம் மாதிரி தன்னதிகாரம் உள்ள மேலாண்மை ஆணையம் காவிரிக்கு அமைக்க வேண்டும். அங்கு மேலாண்மை வாரியமே அணையை திறந்து, மூடும் அதிகாரம் படைத்தது. அது போல் தான் காவிரி நதிக்கு அமைக்கப்படும் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும்.

ஆனால் மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்குத்தான் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கர்நாடக அரசு திறக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தியதில்லை. அதற்காக உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, மேலாண்மை ஆணையம் கூறியபடி தண்ணீர் திறந்து விடாவிட்டால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், ஆணைய கூட்ட முடிவுக்குப் பின்னர் கூறுகையில், ‘நாங்கள் 6-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கர்நாடக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை கேட்டு அதன் பிறகு தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது பற்றி முடிவுக்கு வருவோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

அப்படி என்றால் காவிரி மேலாண்மை ஆணையம் அவர்களை கட்டுப்படுத்தாதா? ஆணையத்தின் உத்தரவுக்கு கர்நாடக அரசு கட்டுப்பட வேண்டுமா? இல்லையா? அவர்கள் முடிவு எடுப்போம் என்று கூறுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன. எனவே காவிரி ஆணையத்தின் உத்தரவான 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்பது செயல்பாட்டுக்கு வருமா? என்பது குறித்து 5-ந்தேதி நடைபெறும் ஒழுங்காற்று குழு கூட்டத்துக்குப்பின்னர் தான் தெரியவரும்.

5-ந்தேதிக்கு பிறகு ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடக அரசு திறக்கவில்லை என்றால், அணையை திறக்கக்கூடிய பணியாளர்களை ஆணையத்துக்கு மத்திய அரசு நியமித்து, அவர்களின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும்.

மேலும் கர்நாடகம், தமிழகத்தில் கல்லணையை தவிர போதிய அணை கட்டாததால் நாங்கள் திறந்து விடும் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது என்று கூறுகிறது. இது போலியான வாதம். கர்நாடகம் உரிய தண்ணீரை தமிழகத்துக்கு திறக்காததால் தான் மேட்டூர் அணை தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. கல்லணையிலும் தண்ணீர் இல்லை.

2013-ம் ஆண்டுக்குப் பின்னர் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் இதுவரை கடலில் கலக்கவில்லை. அதற்கு முன்னர் 2005-ம் ஆண்டு தான் கடலில் தண்ணீர் கலந்தது. கர்நாடகத்தில் இருந்து ஆண்டுக்கு 1000 டி.எம்.சி. தண்ணீர் அரபிக்கடலில் கலக்கிறது. கேரளாவில் இருந்து 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. மேட்டூர் தண்ணீர் 5 டி.எம்.சி. தண்ணீர் கூட கடலில் கலக்கவில்லை. எனவே கர்நாடக அரசு கூறுவது திசைதிருப்பு வாதம், விதண்டாவாதம்.

தமிழகத்தில் தண்ணீர் இன்றி புதிதாக அணைகள் கட்டி எந்த பிரயோஜனமும் இல்லை. இருக்கிற மேட்டூர் அணைக்கே தண்ணீர் இல்லை. இருக்கிற ஆறு, வாய்க்கால்களை பாசனத்துக்கு தூர்வார வேண்டும். இதை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும். கர்நாடக அரசு கவலைப்பட வேண்டாம். 

- பெ.மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு

மேலும் செய்திகள்