கம்பத்தில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கஞ்சா கடத்திய முதியவர் கைது: பெண்ணுக்கு வலைவீச்சு

கம்பத்தில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கஞ்சா கடத்திச் சென்ற முதியவரை தேனியில் போலீசார் கைது செய்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-03 23:49 GMT
தேனி, 

கம்பத்தில் இருந்து ஒரு பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தேனி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் தேனி புறவழிச்சாலையில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு சென்றனர்.

கம்பத்தில் இருந்து வந்த பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது மதுரைக்கு செல்லும் ஒரு பஸ்சில் சந்தேகப்படும் படி முதியவர் ஒருவர் ஏறினார். அவரை போலீசார் பிடித்து அவர் கையில் வைத்து இருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதற்குள் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அந்த முதியவர் மதுரை காளவாசல் பாண்டியன்நகரை சேர்ந்த பேயாண்டி (வயது 62) என்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை கம்பத்தில் ஒருவரிடம் வாங்கி மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் ஒரு பெண்ணும் கம்பத்தில் இருந்து வந்துள்ளார். பஸ் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய பெண்ணும் அதே பகுதியை சேர்ந்தவர் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க மதுரைக்கு போலீசார் விரைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்