ஆரணி கூட்டுறவு விவசாய கடன் சங்க கட்டிடத்தை உடனடியாக திறக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ரூ.25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஆரணி கூட்டுறவு விவசாய கடன் சங்க கட்டிடத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் 1957-ம் ஆண்டு கூட்டுறவு விவசாய கடன் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தில் ஆரணி மற்றும் மல்லியங்குப்பம், பெருமாள்குப்பம், போந்தவாக்கம், வடக்குநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறு சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளை வைத்துள்ளனர்.
மேலும், விவசாய கடன், சிறு கடன், நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆரணி பஜார் தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ஆரணி கூட்டுறவு விவசாய கடன் சங்கம் பின்னர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ஆரணி கூட்டுறவு விவசாய கடன் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆரணி தூட்டார் தெரு முனையில் சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இது வரை இந்த கட்டிடம் திறக்கப்பட வில்லை.
திறக்க கோரிக்கை
இதனால் இந்த கட்டிடம் மது குடிப்பவர்களின் கூடாரமாகவும் மாடுகள் கட்டும் தொழுவமாகவும் மாறி உள்ளது என்று பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே ஆரணி கூட்டுறவு விவசாய கடன் சங்க கட்டிடத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.