புழலில் துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது கத்திகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
புழலில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து கத்திகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்,
சென்னை வியாசர்பாடி கே.கே.நகர் மேல்பட்டிபொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் கடந்த 2013-ல் வியாசர்பாடியை சேர்ந்த தி.மு.க. வட்ட கழக செயலாளராக இருந்த இடிமுரசு இளங்கோவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
மேலும், இவர் மீது கொடுங்கையூர் எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, செம்பியம் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மடக்கி பிடித்தனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புழல் கேம்ப் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
வியாசர்பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்களது வாகனங்களில் துரத்திச்சென்றனர். புழல் காவாங்கரை சிக்னலில் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.
2 கத்திகள் பறிமுதல்
அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது பிரபல ரவுடியான முருகன் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தப்பிச்செல்ல முயன்ற முருகனை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் முருகன் அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடி சேரா என்பவரின் மகனும், பிரபல ரவுடியுமான கதிர் என்பவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனிடம் இருந்து 2 பட்டாக்கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.