தானேயில் குடியிருப்பு கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குடிசை வீட்டில் தூங்கிய வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
தானேயில் குடியிருப்பு கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீட்டில் விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்தார்.
தானே,
தானேயில் குடியிருப்பு கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீட்டில் விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்தார்.
சுற்றுச்சுவர் இடிந்தது
தானே கோட்பந்தர் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த சுற்றுச்சுவர் இடிந்து அங்குள்ள பிரகாஷ் சகாராம் என்பவரது வீட்டின் மீது விழுந்தது.
இதில் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிரகாஷ் சகாராம் (வயது35) இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். மேலும் அவருடன் இருந்த பெண் மற்றும் 10 வயது சிறுவனும் பலந்த காயம் அடைந்தனர்
வாலிபர் சாவு
இதற்கிடையே சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பிரகாஷ் சகாராம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சியினர் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரின் எஞ்சிய பகுதிகளையும் இடித்து அகற்றினர். மேலும் அங்கு வசித்து வரும் 5 குடும்பத்தினர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.