கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி கடைசி நாள்
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வடவள்ளி,
இது தொடர்பாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு துறை டீன் சிவக்குமார் கூறியதாவது:-
கோவை வேளாண்மை பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் கோவை, மேட்டுப்பாளையம், மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம் ஆகிய இடங்களில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் 33 முதுநிலை பட்டப்படிப்புகள், 28 பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகள், 4 பாடப்பிரிவுகளில் பகுதிநேர பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டு (2018-19) சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnau.ac.in என்ற கோவை வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.500 செலுத்த வேண்டும். எந்தெந்த வங்கிகள் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் முழுமையாக விண்ணப்பித்து, அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள சான்றிதழ்களை இணைத்து, டீன், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர வருகிற 11-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதில் மாணவர் சேர்க்கையானது நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறும். முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு 26-ந் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னர் ஆகஸ்டு 20-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். தொடர்ந்து முதல் செமஸ்டர் தேர்வுக்கு ஆகஸ்டு 23-ந் தேதி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி நடைபெறும். அதன்பின்னர் 21-ந் தேதி சேர்க்கை நடைபெறும். நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.
எனவே விண்ணப்பிக்கும்போது தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்களை தவறு இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழக அறிவிப்புகளை தெரிந்து கொள்ள, நாள்தோறும் இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.