கனமழையால் வெள்ள பாதிப்பு: மும்பை மாநகராட்சி நிர்வாகம் நிலைகுலைந்து விட்டது ராகுல்காந்தி தாக்கு
கனமழையால் வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் நிலைகுலைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
மும்பை,
கனமழையால் வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் நிலைகுலைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
மும்பையில் வெள்ளம்
மும்பையில் மீண்டும் கனமழை காரணமாக நேற்று நகரை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தத்தளித்தபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மும்பை அந்தேரியில் உள்ள கோகலே ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராகுல்காந்தி தாக்கு
இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மும்பை வெள்ள பாதிப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மேம்பாலங்கள் இடிந்து விழுகின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். மும்பை மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. எனது சிந்தனைகள் முழுவதும் மும்பை மக்களை பற்றியதாகவே உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மும்பை மாநகராட்சியை பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா நிர்வகித்து வரும் நிலையில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.