நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை பகுதியில் மணல் குவாரி முதல்-அமைச்சர் ஆய்வு

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை பகுதியில் மணல் குவாரி அமைக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2018-07-03 22:30 GMT
அரியாங்குப்பம்,

புதுவை மாநிலத்தில் நடைபெறும் கட்டிட பணிகளுக்கு தேவையான மணல் தமிழகத்தில் இருந்தே வருகிறது. மிக குறைந்த அளவிலேயே கிடைப்பதால் மணலுக்கு இங்கு கடும் கிராக்கி உள்ளது. இதனால் மணலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்து வருகிறது.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு தமிழக குவாரிகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால், மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் மணல் விலை உச்சத்தை தொட்டதால், புதுவையில் உள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெற்றது. இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க இங்குள்ள ஆறுகளில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை அருகே மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். இந்த இடத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது படுகை அணை பகுதியில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றில் படிந்துள்ள மணல் பரப்பை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டார்.

ஆய்வின்போது அரசு கொறடா அனந்தராமன், வருவாய் ஆணையர் தில்லைவேல், தாசில்தார் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணைப்பகுதியில் படிந்துள்ள மணலை பருவமழைக்கு முன்பாக குவாரி அமைத்து அள்ளினால், அணை பகுதி ஆழமாகி அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். மேலும் மழைக்காலத்தில் கடலில் தண்ணீர் வீணாக கலப்பது தடுக்கப்படுவதுடன், புதுவைக்கு தேவையான மணலும் எளிதாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்