நிலம் குறித்த வழக்கில் லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் பற்றி முன்னாள் தலைமை நீதிபதி புகார் கொடுக்க தவறியது ஏன்?
நிலம் குறித்த வழக்கில் லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் பற்றி முன்னாள் தலைமை நீதிபதி புகார் கொடுக்க தவறியது ஏன்? என்று சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு,
நிலம் குறித்த வழக்கில் லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் பற்றி முன்னாள் தலைமை நீதிபதி புகார் கொடுக்க தவறியது ஏன்? என்று சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஏ.டி.ராமசாமி பேசியதாவது:-
நீதிபதிக்கே லஞ்சம்
கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் எஸ்.கே.முகர்ஜி. அவர், நிலம் குறித்த வழக்கில் தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தனர் என்று கோர்ட்டு அறையில் கூறினார். தலைமை நீதிபதிக்கே லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு நில கொள்ளையர்கள் செல்வாக்குடன் திகழ்கிறார்கள். லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் யார் என்பதை தலைமை நீதிபதி கூறவில்லை. அவர்கள் மீது புகார் கொடுக்க தவறியது ஏன்?. ஒருவேளை அதுபற்றி புகார் கொடுத்து விசாரணை நடைபெற்றால், ஏற்கனவே தான் செய்த ஊழல்கள் வெளியே தெரிந்துவிடும் என்று கருதி நீதிபதி புகார் கொடுக்காமல் இருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். புகார் கொடுக்காததே குற்றம் தான்“ என்றார்.
அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் குறுக்கிட்டு, “தலைமை நீதிபதி தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தவர்கள் மீது புகார் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் புகார் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. லஞ்சம் கொடுக்க வந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா?“ என்றார்.
நகர போலீஸ் கமிஷனர்
அதைத்தொடர்ந்து பேசிய ஏ.டி.ராமசாமி, “பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் நகரில் 8 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தார். இதுதொடர்பாக நான் அரசுக்கு பலமுறை மனு கொடுத்தேன். அதன் பிறகு அந்த நிலத்தை அரசு கைப்பற்றியது. ஆனால் இதற்கு ஐகோர்ட்டில் தடை வாங்கியதாக அந்த போலீஸ் கமிஷனர், போலியாக ஒரு முத்திரையை உருவாக்கி, ஆவணங்களை தயாரித்து காட்டினார். அவர் கர்நாடகத்திற்கு துரோகம் செய்தார். இது வெட்கக்கேடானது. இவ்வாறு நில முறைகேடு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அத்தகையவர்கள் மீது மாநில அரசு பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.