புதுக்கோட்டையில் உள்ள வரத்துவாரிகளில் தூர்வாரும் பணி தொடங்கியது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நேற்று வரத்துவாரிகளில் தூர்வாரும் பணி தொடங்கியது.

Update: 2018-07-03 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதேபோல புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு, பூங்காநகர், பெரியார்நகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரத்துவாரிகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து ஆறுபோல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இதேபோல புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளம், புதுக்குளம், காந்திபூங்கா குளம், திருக்கோகர்ணம் பெரியகுளம், புதுஅரண்மனை குளம், மாப்பிள்ளையார்குளம், நைனாரி குளம், அடப்பன்குளம் உள்பட நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு மழைநீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துவிடும். தற்போது குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளதால், புதுக்கோட்டை நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் வரத்துவாரிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும்படி மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நகராட்சி சார்பில் வரத்துவாரிகளில் தூர்வாரும் பணி தொடங்கியது. பெரியார்நகர், ராஜகோபாலபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வரத்துவாரிகளை தூர்வாரினர். இந்த பணிகள் இன்னும் 4 நாட்களில் முடிவடையும் என்று நகராட்சி அதி காரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்