பராமரிப்பு பணியை காரணம் காட்டி அடிக்கடி ரத்து செய்யப்படும் திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்
பராமரிப்பு பணியை காரணம் காட்டி திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லை,
பராமரிப்பு பணியை காரணம் காட்டி திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாசஞ்சர் ரெயில்திருச்செந்தூரில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு நெல்லை, மதுரை வழியாக பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூர்–பழனி இடையே இயக்கப்பட்டு வந்த போது கோவை வரை நீட்டிக்கப்படும் என்று தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். அப்போது அமைக்கப்பட்டு வந்த அகல ரெயில் பாதை பணி முடிந்த உடன் கோவை வரை நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பிலும் கூறப்பட்டது. ஆனால் அதே அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை காரணம் காட்டி இந்த ரெயிலை கேரள மாநிலம் பாலக்காடு வரை நீட்டித்து விட்டனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வழித்தடத்தில் எங்கே பராமரிப்பு பணி நடந்தாலும் அதை காரணம் காட்டி திருச்செந்தூர்–பாலக்காடு ரெயிலை பகுதி வாரியாக ரத்து செய்து விடுகின்றனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் இந்த ரெயிலை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த ரெயில் எப்போது எந்த ஊர் வரை செல்லும், ஒவ்வொரு நாளும் முழுமையாக ஓடுமா?, ஓடாதா? என்ற குழப்பம் காரணமாக இந்த ரெயிலை பயணிகள் புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
பகுதி வாரியாக ரத்துஇந்த நிலையில் தற்போதும் இந்த ரெயிலை குறிப்பிட்ட நாட்களுக்கு பகுதி வாரியாக ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கடம்பூர்–வாஞ்சி மணியாச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 31–ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் இருமார்க்கத்திலும் நாளை முதல் 14–ந் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெல்லை–கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. 15–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை இருமார்க்கத்திலும் சாத்தூர்–நெல்லை இடையே திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் 7–ந் தேதி முதல் 31–ந்தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இருமார்க்கத்திலும் மதுரை–நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப்பாதை–நேரம் மாற்றம்எனவே இந்த ரெயிலை திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை தினசரி முழுமையாக இயக்க வேண்டும். ஏதேனும் ஒரு பகுதியில் பராமரிப்பு நடைபெற்றால் இந்த ரெயிலை மாற்று பாதையில் இயக்க வேண்டும். இல்லை என்றால் பராமரிப்பு பணியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.