மஸ்கட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மும்பை வந்த பெண் கைது

மஸ்கட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மும்பை வந்த பெண் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-03 03:39 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மஸ்கட்டில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், பாஸ்போர்ட்டில் ஒரு படமும், அதிகாரிகளின் கணினியில் வேறு ஒரு பெண்ணின் படமும் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

பிடிபட்ட பெண் அவுரங்காபாத்தை சேர்ந்த ஷகிதா சேக்(42) என்று தெரியவந்தது. இவர் கடந்த 2005-ம் ஆண்டு வீட்டு வேலை செய்வதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு இவரின் பாஸ்போர்ட், விசா காலாவதியாகி உள்ளது.

எனவே அவர் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஒரு டிராவல் ஏஜெண்டை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த ஏஜெண்டு கேரளாவை சேர்ந்த ஷீபா ராஜேந்திரன் என்ற பெண்ணின் பாஸ்போர்ட்டில் ஷகிதா சேக்கின் புகைப்படத்தை ஒட்டியுள்ளார். பின்னர் அந்த போலி பாஸ்போர்ட் மூலம் ஷகிதா சேக்கை மஸ்கட்டில் இருந்து மும்பை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்