வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: தேனியில் சாலை மறியல் 103 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிரகடனம் செய்ய கோரி தேனியில் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலைமறியல் செய்தனர். 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கிராம முன்னேற்ற இயக்கம், வனவேங்கைகள் இயக்கம், பழங்குடி மக்கள் இயக்கம், தேசிய தலித் மக்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். மற்ற அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மறியலின் போது, உடனே அவசர சட்டம் கொண்டு வரவேண்டும், அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை இணைக்க வேண்டும், உத்தரப்பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தூப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்து தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.