வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம்: திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 244 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 244 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு புதிய விதிகளை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிசூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் மறியல் போராட்டம் நடந்தது.
அதன்படி திண்டுக்கல்லில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்பட 16 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ரெயிலை மறிப்பதற்காக, திண்டுக்கல் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசாரின் தடையை மீறி அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர். பின்னர் நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலர் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருவழியாக அனைவரையும் தண்டவாளத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரையும் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேரை போலீசார் ரகசியமாக அழைத்து சென்றதாகவும், எனவே, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 2 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதிஅளித்தனர். அதன்பின்னரே அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். அதேநேரம் ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு உள்பட மொத்தம் 244 பேர் கைது செய்யப்பட்டனர்.