திருப்பூர், உடுமலையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 300 பேர் கைது

திருப்பூர், உடுமலையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-03 00:57 GMT
திருப்பூர்,

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்பட 17 கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி ரெயில் மறியல் செய்வதற்காக ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரெயில் மறியலுக்கு முயன்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்றதாக போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 195 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை அரசு பஸ்களில் ஏற்றி, திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதன் பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக அவினாசி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர்.

இதேபோல் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் உடுமலை பஸ்நிலையம் எதிரே திரண்டனர். மேலும் கையில் கொடிகளுடன் கோஷங்கள் எழுப்பியவண்ணம் பஸ் நிலையத்திலிருந்து ராஜேந்திரா ரோடு வழியாக ஊர்வலமாக சென்று உடுமலை ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

ரெயில் மறியலை தடுக்கும் விதமாக உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் உடுமலை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்தும், கயிறுகள் கட்டியும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாத வகையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனைதொடர்ந்து ரெயில் நிலையம் முன்பாக கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உச்சநீதிமன்றத்தீர்ப்பை செல்லாததாக்கும் விதமாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்