நீர்த்தேக்க திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அளவீடு பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கண்ணங்கோட்டை நீர்த்தேக்க திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அளவீடு பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-07-03 00:46 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே ஏரிகளை இணைத்து அமைக்கப்பட உள்ள கண்ணங்கோட்டை நீர்த்தேக்க திட்டத்திற்கான அரசு புறம்போக்கு நிலத்தில் நடைபெற்ற அளவீடு பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அளவீடு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அதன் அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து ரூ.330 கோடியில் 1,200 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்த நீர்த்தேக்கத்தில் 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்து, அதனை சென்னை குடிநீர் திட்டத்துக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த புதிய நீர்த்தேக்க திட்டத்தால் தேர்வாய் கண்டிகை கிராமத்தில் பாசன வசதி பாதிக்கும் என்றும், கண்ணங்கோட்டை கிராமத்தில் உள்ள சுமார் 750 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் பட்டா நிலங்கள் பாதிக்கும் என்றும், எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பின்னர் உரிய இழப்பீடு தருவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கான எதிர்ப்பை கிராம மக்கள் கைவிட்டனர். தற்போது கண்ணங்கோட்டையில் உள்ள 220 விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி நிலத்திற்கான உரிய இழப்பீட்டு தொகை இது வரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் கண்ணங்கோட்டை ஏரியையொட்டி உள்ள 100 மீட்டர் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து அதனை ஏரியின் கரையோடு சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை வருவாய்துறையினருடன் இணைந்து பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதனை அறிந்து அப்பகுதிக்கு திரண்டு வந்த கண்ணங்கோட்டை கிராம பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற அறிவிப்பின்படி தங்களுக்கு உரிய முழு இழப்பீடு தொகையை வழங்கிய பிறகே அரசு தரப்பில் எந்த பணியானாலும் மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணங்கோட்டை கிராம மக்கள் சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் துளசிநாராயணன் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டார்.

முதல்கட்டமாக அரசுக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு பணிகளை மேற்கொண்டாலும், கிராம மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதே கிராமத்தைச்சேர்ந்த நாகராஜ்(வயது 34), சினீவாசன்(67), ராதன் (70), தசரதன்(50), சதானந்தம் (46), கக்கையா(74), மதன் (30) மற்றும் கோவிந்தசாமி(45) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதையடுத்து மேலும் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களின் எதிர்ப்பால் அரசு தரப்பில் அளவீடு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. கைதான 8 பேரையும் விடுதலை செய்தனர்.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) சமாதானக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் உரிய தீர்வு காணப்படும் என்றும் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தெரிவித்தார். இதையடுத்து அங்கு முற்றகையிட்ட கண்ணங்கோட்டை கிராம பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்