ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 475 பேர் கைது

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்கக்கோரி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 475 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-03 00:43 GMT
ஈரோடு, 

புதுடெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான ஒரு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த மார்ச் 20-ந் தேதி ஒரு தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பானது பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முற்றிலும் நீர்த்துப்போக செய்வதாக உள்ளது என்று பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் குற்றம்சாட்டி உள்ளன. இந்தநிலையில் சமூக நீதியை தகர்க்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திருத்தி, அதை செல்லாததாக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். வன்கொடுமை சட்டத்தை பாதுகாக்க போராடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டின் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான தீர்ப்பினை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, விடுதலை வேங்கைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தலித் விடுதலை கட்சி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கம், தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்த கட்சிகள் சார்பில் நேற்று ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார்.

காளைமாடு சிலை பகுதியில் போராட்டக்குழுவினர் கூடினார்கள். அங்கிருந்து அவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி, திராவிடர் கழக மாநில துணை செயலாளர் த.சண்முகம், தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் பேரவை அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வீர.கோபால், திராவிடர் விடுதலைக்கழக மாநில நிர்வாகி ரத்தினசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வன்கொடுமை சட்டத்தை பாதுகாக்கக்கோரியும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை திருத்தி சட்டம் இயற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்கள் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு வந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார், ஈரோடு மாவட்ட குற்ற ஆவணகாப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார், வினோதினி, அமுதா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ ஆகியோர் கொண்ட போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்தனர்.

ஆனால் போராட்டக்குழுவினர் ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று உறுதியுடன் முன்னேறிச்சென்றனர். அவர்களை தடுக்க போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்பு வேலிகள், கயிறுகளை எல்லாம் தாண்டி போராட்டக்குழுவினர் ரெயில் நிலையத்துக்குள் ஓடினார்கள். அங்கு 3-வது நடைமேடையில் ஈரோட்டில் இருந்து கோவை செல்வதற்கான பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்ததும் ஓடிச்சென்று ரெயிலில் ஏறியும், ரெயில் முன்பு படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயிலின் கூரையில் ஏறி நின்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பேரில் அனைவரும் ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். அனுமதியின்றி ரெயில் நிலையத்துக்குள் வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் கைது செய்து ரெயில் நிலையத்தின் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வாகனங்களில் ஏற்றி பெரியார் மன்றம் மற்றும் ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 125 பேர் பெண்கள்.

போராட்டத்தையொட்டி ஈரோடு ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் வி.கே.மீனா, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் தலைமையில் ரெயில்வே துறை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்