மணல் கடத்திய மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து கிராமமே திரண்டு வந்து மறியல்

மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது சாவுக்கு காரணமான மாட்டுவண்டி உரிமையாளரை கைது செய்யக்கோரி கிராமமே திரண்டு வந்து மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் ஆம்பூரில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Update: 2018-07-03 00:37 GMT
ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா ரெட்டிமாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன். இவரது மகள் சங்கவி (வயது 11), அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் விளையாடிவிட்டு, சைக்கிளில் வீட்டிற்கு வந்து இறங்கிய போது திடீரென தவறி கீழே விழுந்தாள். அப்போது அப்பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து கென்னடி என்பவர் மணல் திருடிக்கொண்டு மாட்டுவண்டியை ஓட்டிவந்தார். அந்த மாட்டு வண்டியில் சிறுமி சங்கவி சிக்கிக் கொண்டாள். அவள் மீது மாட்டு வண்டி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சங்கவி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள்

இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மாட்டுவண்டி உரிமையாளர் மீது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் மேல்பட்டி போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கவியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் நேற்று காலை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சங்கவியின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி எதிரே நேதாஜி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், “மாட்டுவண்டியை ஓட்டி வந்த கென்னடி சிறுமியை கொலை செய்வதுபோல் ஏற்றி கொன்று விட்டார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மகன் பிரதாப்பையும் (22) கைது செய்ய வேண்டும், மாணவியின் சாவுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், ரெட்டிமாங்குப்பம் பகுதி பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்” என்றனர்.

அவர்களிடம் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி சாலை மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனிடையே ரெட்டிமாங்குப்பத்தை சேர்ந்த கிராம மக்கள் லாரிகள், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து குவிய தொடங்கினர். ஊரே திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாலும் அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டதாலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடந்ததால் போலீசார் செய்வதறியாது தவித்தனர். அதன்பின் அந்த கிராமத்தை சேர்ந்த பெரியோர்களுடன் போலீசார் “சாலை மறியலை கைவிடுங்கள். ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் வாருங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

ஆனால் கென்னடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கும் மேல்பட்டி போலீசாரும், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டும் உடனே வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் ½ மணி நேரத்தில் வந்துவிடுவார்கள் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, ஆம்பூர் தாசில்தார் சாமுண்டீஸ்வரி, பேரணாம்பட்டு தாசில்தார் (பொறுப்பு) சரவணன், இன்ஸ்பெக்டர் அப்பாசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட பிரச்சினையில் கென்னடியை கைது செய்துள்ளோம். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது மகன் பிரதாப்பை கைது செய்துவிடுகிறோம். சங்கவி சாவுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனஉறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சங்கவியின் உடலை வாங்கிக் கொண்டு பொதுமக்கள் ஊருக்கு திரும்பினர்.

இந்த நிலையில் சிறுமி இறந்த சம்பவம் தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர் போராட்டம் நடத்திய இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்