கிணற்றில் குழந்தை பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: தொழிலாளி கைது
சின்னசேலம் அருகே கிணற்றில் குழந்தை பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால், தனது மகளை, கிணற்றில் வீசி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம்,
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணாபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் மாலை 1½ வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று பிணமாக மிதந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த குழந்தை யாருடையது என்பது? குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குழந்தை சின்னசேலம் அருகே உள்ள கருந்தளாக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த தொழிலாளி அருள்மணி(வயது 23), அஞ்சலை(20) தம்பதியரின் மகள் அனுஜ்(2) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கருந்தளாக்குறிச்சிக்கு சென்று வீட்டில் இருந்த அருள் மணியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், தனது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூரை சேர்ந்த அஞ்சலை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 1½ வயதில் அனுஜ் என்ற மகள் இருந்தாள்.
இந்தநிலையில் எனக்கும் எனது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அஞ்சலை தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கோட்டமருதூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நான் கோட்டமருதூருக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த மனைவியை என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், எனது மகள் அனுஜை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு பஸ்சில் புறப்பட்டேன். நயினார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தேன். மனைவி என்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த நான் வி.கிருஷ்ணாபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் எனது மகளை தூக்கி வீசி கொலை செய்தேன். பின்னர் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.
இதையடுத்து அருள் மணியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை தந்தையே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.