40 இடங்களில் சிகிச்சை முகாம்: கல்லலை தொழுநோய் இல்லா ஒன்றியமாக மாற்ற நடவடிக்கை

கல்லல் ஒன்றியத்தை தொழுநோய் இல்லாத ஒன்றியமாக மாற்றும் வகையில் 40 இடங்களில் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

Update: 2018-07-02 23:57 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மருத்துவ பணிகள்(தொழுநோய்) துணை இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தொழுநோயை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியத்தை தேர்வு செய்து அங்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து முற்றிலும் தொழு நோய் இல்லாத ஒன்றியமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இதில் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தை முற்றிலும் தொழுநோய் பாதிப்பு இல்லாத ஒன்றியமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 13-ந்தேதி வரை சுகாதாரத்துறை பணியாளர்கள் கல்லல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களுக்கு தொழுநோய் அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வில் சுகாதார பணியாளர்களுடன் இணைந்து நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் செயல்பட உள்ளனர். தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நோய் குணமாவதுடன், உடல் ஊனம் வராமல் தடுக்கலாம். பொதுவாக வெளிர்ந்த அல்லது சிவந்த உணர்ச்சியற்ற தேமல் தொழு நோயாகவும் இருக்கலாம். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வருபவர்களிடம் தங்களது முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

வருகிற 13-ந்தேதி முதற்கட்டமாகவும், அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 40 இடங்களில் இலவச தொழு நோய் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்