புதுச்சேரி சட்டசபையில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்

புதுவை சட்டசபையில் நேற்று ரூ.7 ஆயிரத்து 530 கோடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

Update: 2018-07-03 00:15 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று மீண்டும் கூடியது.

கடந்த (ஜூன்) மாதம் 4-ந்தேதி புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் இந்த கூட்டம் அப்போது 2 நாட்கள் மட்டுமே நடந்தது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும் என்பது அவசியம். இந்தநிலையில் பட்ஜெட்டில் சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் அப்போது சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில் சட்டசபை மீண்டும் கூடியது. நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். காலை 10 மணி முதல் பகல் 11.15 மணிவரை பட்ஜெட்டில் உள்ள விவரங்கள் குறித்து அவர் பேசினார்.

பட்ஜெட்டை விளக்கி முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

2018-19ம் ஆண்டுக்கான மாநில திட்டக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மொத்த வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு ரூ.7 ஆயிரத்து 530 கோடி ஆகும். மாநில நிதி ஆதாரங்கள் ரூ.4 ஆயிரத்து 570 கோடியாகவும் (61 சதவீதம்), மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,476 கோடியாகவும் (25 சதவீதம்) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.409 கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள பற்றாக்குறையான ரூ.1,050 கோடி (14 சதவீதம்) வெளிச்சந்தை கடன் மற்றும் மத்திய நிதி நிறுவனங்களின் மூலம் திரட்டப்படும்.

மொத்த செலவினங்களை திட்டம் மற்றும் திட்டம் சாராதது என்ற வகைப்படுத்தும் முறை மத்திய அரசால் நீக்கப்பட்டு அவை நடைமுறை செலவினங்கள் மற்றும் மூலதன செலவினங்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதுச்சேரி அரசும் செலவினங்கள் நடைமுறை மற்றும் மூலதனம் என்று 1.4.2018 முதல் வகைப்படுத்தியுள்ளது.

அரசு நிதி ஆதாரங்களின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன் சேவை மற்றும் மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தவிர்க்க முடியாத செலவினங்களுக்காக செலவிடப்பட்டு வருகிறது. வரவு- செலவு திட்ட மதிப்பீடான ரூ.7 ஆயிரத்து 530 கோடியில் ரூ.1,800 கோடி சம்பளங்களுக்கும் (24 சதவீதம்), ரூ.875 கோடி ஓய்வூதியங்களுக்கும் (12 சதவீதம்), ரூ.1,380 கோடி கடன் சேவைகளுக்கும் (18 சதவீதம்), ரூ.1,200 கோடி மின்சாரம் வாங்குவதற்கும் (16 சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் மற்ற நலத்திட்டங்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றுக்கு ரூ.540 கோடியும் (7 சதவீதம்), பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக (சம்பளங்கள் மற்றும் கொடை) ரூ.762 கோடியும் (10 சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2017-18ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கில் ரூ.6 ஆயிரத்து 757 கோடி, அதாவது 95 சதவீதம் செலவு செய்யப்பட்டது. புதுச்சேரி வரலாற்றிலேயே மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களின் கீழ் மிக அதிகபட்சமாக 82 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-18ல் முந்தைய ஆண்டைவிட அரசு வருவாய் ரூ.505 கோடி (14 சதவீதம்) அதிகரித்துள்ளது.

புதுச்சேரி அரசு தனிப்பொதுக்கணக்கு 17.12.2007 அன்று தொடங்கப்பட்ட பிறகு திட்டங்களுக்கான கடன் வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மாறாக புதுச்சேரி அரசு வெளிச்சந்தை மற்றும் ஹட்கோ, நபார்டு மூலமாக திட்ட செலவுகளுக்காக கடன் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. தனி பொதுக்கணக்கு தொடங்கப்பட்டபோது புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் பாக்கி ரூ.2 ஆயிரத்து 177 கோடி. இது புதுவை அரசின் மீதுள்ள மிகப்பெரிய கடன் சுமையாகும். இதை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

2016-ல் எனது அரசு பதவியேற்றது முதல் இந்த கடனை தள்ளுபடி செய்வதற்கும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை ரூ.1,050 கோடியை ஏற்குமாறும், புதுச்சேரி மாநிலத்தை 15-வது நிதிக்குழுவின் வரம்புக்குள் சேர்க்கவேண்டும் என்றும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுவை அரசு ஊழியர்களின் ஓய்வூதிய செலவை ஏற்கவும் மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை.

புதுவை அரசின் கீழ் 12 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சாராய ஆலை மற்றும் மின்திறல் குழுமம் தவிர மீதமுள்ள நிறுவனங்கள் நலிவடைந்து இருப்பதால் இதுவரை சுமார் ரூ.600 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயனை கொண்ட ஒருநபர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 4 பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி தனது அறிக்கையை தற்போது அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

அரசுக்கு நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் மாநிலத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் 2007-08ம் ஆண்டில் வெளிச்சந்தையில் ரிசர்வ் வங்கி மூலம் பெறப்பட்ட ரூ.337 கோடி அசல் தொகையை அரசு திரும்ப செலுத்தியுள்ளது. இதேபோல் நடப்பு ஆண்டில் ரூ.350 கோடி வெளிச்சந்தை கடனை திருப்பி செலுத்த வேண்டும். 2018-19ம் நிதியாண்டில் நபார்டு, ஹட்கோ மற்றும் வெளிச்சந்தை கடன்கள் உள்பட செலுத்த வேண்டிய மொத்த அசல் மற்றும் வட்டித்தொகை ரூ.1,380 கோடியாகும். இது மொத்த செலவுத்தொகையில் 18 சதவீதம் ஆகும்.

2017-18 நிதியாண்டுவரை பெறப்பட்ட கடன்களை உள்ளடக்கி தற்போது நிலுவையிலுள்ள புதுவை அரசின் மொத்த கடன் தொகை ரூ.7 ஆயிரத்து 730 கோடியாகும். 2018-19ல் புதுச்சேரி அரசின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ஆகும். 2017-18ல் அகில இந்திய வளர்ச்சி 7 சதவீதம்தான். ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் உற்பத்தி வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் வரிகளும் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்