பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. வெளிநடப்பு

புதுவை பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-02 23:36 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது ரங்கசாமி பேசுகையில், ‘என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையும் இன்னும் செயல்படுத்தவில்லை. இந்தநிலையில் பட்ஜெட் தேவையா? எனவே இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்’ என்றார். இதைத்தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் எழுந்து கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையே நிறைவேற்றாத நிலையில் புதிய பட்ஜெட் தேவையா? எனக்கேட்டு அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் ‘எங்கே இலவச அரிசி எங்கே?, திரும்ப பெறு, திரும்ப பெறு ஸ்மார்ட் மீட்டரை திரும்ப பெறு’ என்று எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமும் போட்டனர். குப்பைக்கு வரி போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலிதீன் பைகளில் குப்பைகளை போட்டு அதனை எடுத்து வந்து இருந்தனர்.

சபாநாயகர் இருக்கையை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை சபைக்காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் சட்டசபைக்கு உள்ளே சென்றனர். அவர்கள் வெளிநடப்பு செய்திருந்த நேரத்தில் சபையில் இருந்தவர்களுக்கு மட்டும் பட்ஜெட் புத்தகம் வழங்கப்பட்டது. எனவே அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு பட்ஜெட் புத்தகம் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து அவர்கள் சபாநாயகர் அறைமுன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு பட்ஜெட் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு சபையின் உள்ளே சென்று தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை அரசு தனது தேர்தல் வாக்குறுதியிலும், பட்ஜெட் அறிவிப்பிலும் ஒன்றை கூட செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ, மாநில வளர்ச்சியிலோ கவனம் செலுத்தவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்தி மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு தனது கடமையில் இருந்து தவறி விட்டது. போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிதாக ஒரு பயனாளிக்கு கூட நிதி வழங்கவில்லை. விவசாயிகளுக்கு கரும்புக்கு நிலுவை தொகை வழங்கவில்லை. பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. குப்பை வரி, தண்ணீர் வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் மின் கட்டண வரி உயர்வு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட். எனவே இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்