பெங்களூருவில் தொழில்அதிபரை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் பீகாரை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் கைது

பெங்களூருவில் தொழில்அதிபரை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் பீகாரை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-07-01 23:44 GMT
பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் தொழில்அதிபர் கங்கையா லால் என்பவருக்கு சொந்தமான நிறுவனமும் உள்ளது. அவர் இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் இருந்து சோளத்தை விலைக்கு வாங்கி, அதனை கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி நிறுவனத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், கங்கையா லாலை நோக்கி 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார்கள்.

இதில், அவர் மீது குண்டு பாயவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். அங்கிருந்த கேமராக்களில் கங்கையா லாலை சுட்டுக் கொல்ல முயன்ற மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், தொழில்அதிபர் கங்கையா லாலை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் விபூதிகுமார் சிங்(வயது 58), சுராஜ் பானுசிங்(26) என்பதும், 2 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. மேலும் பீகாரை சேர்ந்த தொழில்அதிபரான ராஜேந்திர அகர்வால் தான், கங்கையா லாலை கொலை செய்யும்படி கூறியதாக கைதான 2 பேரும் தெரிவித்தார்கள்.

அதாவது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்திருந்த ராஜேந்திர அகர்வால், பீகார் மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து சோளத்தை வாங்குவது, விற்பனை செய்வதை தனது நிறுவனத்திற்கு தரும்படி கங்கையா லாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக 2 தொழில்அதிபர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கு ரூ.30 லட்சத்தை கொடுத்து கங்கையா லாலை கொலை செய்யும்படி ராஜேந்திர அகர்வால் கூறியுள்ளார்.

அதன்பேரில், கடந்த மாதம் 2-ந் தேதி கங்கையா லாலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றிருந்தார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேந்திர அகர்வால், கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்