அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு

ஆவணத்தான்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-07-01 22:30 GMT
அறந்தாங்கி,

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மை குழு, மற்றும் கிராம இளைஞர்கள் ஆர்வத்துடன் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ததுடன் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சலுகைகளும் வழங்கி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

மாணவர்களுக்கு பொன்னாடை

அதன்படி அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்காக இளைஞர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 25 புதிய மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியும், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டவர்களை பாராட்டும் விழாவும் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு அறந்தாங்கி வட்டாரவளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மணி மேகலை வரவேற்றார். விழாவில் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.

சீருடைகள்

தொடர்ந்து தன்னார்வமாக 15 மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க தொடர் முயற்சி மேற்கொண்ட தம்பிராசை அனைவரும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். விழாவில் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டதுடன் புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சிவகவுரி தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்ததால் அனைவரும் அவரை பாராட்டினர். இதில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உள்பட கிராம பொதுமக்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்