ஆம்பூர் அருகே நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

ஆம்பூரை அடுத்து விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் சென்ற போது, என்ஜினில் கோளாறு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

Update: 2018-07-01 23:15 GMT
ஆம்பூர்,

வேலூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவர், தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். வேலூரை சேர்ந்த அஸ்ரப் என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

ஆம்பூரை அடுத்து விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் சென்ற போது, காரில் இருந்து புகை வர ஆரம்பித்தது. உடனே என்ஜினில் கோளாறு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் காரில் இருந்த டிரைவர் அஸ்ரப் மற்றும் வெங்கடேசன், அவரது குடும்பத்தினர் 3 பேர் சுதாரித்து கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். பின்னர் சற்று நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்