சேலம், ஈரோடு, வேலூரில் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு தொடங்கியது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்

சேலம், ஈரோடு, வேலூரில் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-01 22:45 GMT
சேலம்,

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழ் மக்களின் உள்ளத்தோடும், உணர்வோடும் உறவாடி வெற்றி பெற்ற ஹலோ எப்.எம்.(106.4) சென்னையில் கடந்த 2006-ம் ஆண்டு தனது பண்பலை சேவையை தொடங்கியது. இதன் சரித்திர சாதனை வெற்றியை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, புதுவை ஆகிய இடங்களில் இருந்து ஹலோ எப்.எம் ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் 42 லட்சம் நேயர்கள் விரும்பும் சிறந்த பண்பலை வானொலி என்ற பெருமையுடன், தனக்கென்று தனி இடம் பிடித்து தன்னிகரில்லாத வானொலியாக ஹலோ எப்.எம். திகழ்கிறது. புதிய பாடல்கள், பழைய பாடல்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களின் சூடான பேட்டி, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பேட்டி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களின் மத்தியில் ஹலோ எப்.எம்.அமோக வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், தற்போது சேலம், ஈரோடு மற்றும் வேலூரில் நேற்று முதல் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. உள்ளூர் தொகுப்பாளர்களின் திறமையாலும், உணர்வுகளோடு உறவாடும் நிகழ்ச்சிகளாலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஹலோ எப்.எம். சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களின் பேராதரவோடு பயணத்தை தொடங்கியுள்ளது.

மாங்கனி மாநகரமான சேலத்தில் ஹலோ எப்.எம் (91.5) சேவை தொடக்க விழா நேற்று காலையில் நடைபெற்றது. சேலம் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவையை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார். இதேபோல், ஈரோடு மற்றும் வேலூரிலும் ஹலோ எப்.எம்.சேவை தொடங்கப்பட்டது. அதாவது சேலம், வேலூரில் 91.5 என்ற அலைவரிசையிலும், ஈரோட்டில் 92.7 என்ற அலைவரிசையிலும் தனது ஒலிபரப்பு சேவையை ஹலோ எப்.எம். தொடங்கி உள்ளது.

சேலத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள பண்பலை வானொலி ஹலோ எப்.எம்.91.5 என்பது குறிப்பிடத்தக்கது. சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஹலோ எப்.எம்.-ல் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் நேயர்கள் இடைவிடாமல் கேட்டு ரசிக்கலாம். ஹலோ எப்.எம். வானொலியின் தொடர் இசைமழை சேலம் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல ஹலோ எப்.எம். ஈரோடு மாவட்டத்தின் முதல் பண்பலை வானொலியாக தொடங்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், ஈரோடு, வேலூரில் நேற்று தனது ஒலிபரப்பு சேவையை தொடங்கி உள்ள ஹலோ எப்.எம். முதல் நாளிலேயே நேயர்களுக்கு தங்க காசுகளை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில்களை குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ்-அப்பிலோ அல்லது செல்போனில் குறுந்தகவல் மூலமோ அனுப்பிய நேயர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அதிக நேயர்கள் விரும்பும் எப்.எம். மற்றும் தமிழகத்தின் மிகச்சிறந்த தொகுப்பாளர்கள் விருதுகளை பெற்று சாதனை புரிந்த ஹலோ எப்.எம். சேலம் மற்றும் ஈரோடு, வேலூர் மாவட்ட மக்களின் அமோக ஆதரவோடு மேலும் சரித்திர சாதனைகள் படைக்கும் என்பது நிச்சயம். 

மேலும் செய்திகள்