கிறிஸ்தவர்கள் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் செல்ல 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள், அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Update: 2018-07-01 22:15 GMT
பெரம்பலூர்,

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் இந்த (ஜூலை) மாதம் தொடங்கி வருகிற டிசம்பர் மாதம் வரை பல்வேறு குழுக்காக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகள் மாவட்டம் வாரியாக கிறிஸ்தவ மக்கள் தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தேர்வு செய்யப்படுவர். பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். புனித பயணத்திற்கான காலம் மற்றும் நிகழ்ச்சி நிரல் ஜெருசலேம் புனித பயணக்குழுவால் முடிவு செய்யப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை குறித்து www.bcmbcmw.gn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5-வது தளம்), அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகளில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்