ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

Update: 2018-07-01 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அங்குள்ள அணைகளில் இருந்து உபரியாக வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு தமிழகம் நோக்கி வந்தது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது. நேற்றும் 2-வது நாளாக தடை நீடித்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அரைஞ்சான், கட்லா, ரோகு மீன்களின் வரத்தும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

விடுமுறை தினமான நேற்று கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அருவியில் குளிக்காமலும், பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். அருவிக்கு அருகே நுழைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் மிதமான மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்தோம். அங்கு அருவியில் குளிக்கலாம், பரிசல் பயணம் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அதிகளவில் தண்ணீர் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் குளிக்க முடியவில்லை. பரிசலிலும் செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்