மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி தொடரக்கூடாது - நக்மா பேட்டி

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி தொடரக்கூடாது என அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-01 23:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ‘‘சக்தி’’ புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது.

விழாவுக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான நக்மா தலைமை தாங்கி புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அவர், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான நக்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் உள்ள மகளிரை ஒருங்கிணைக்கும் வகையில் அகில இந்திய அளவில் மகிளா காங்கிரஸ் வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நடவடிக்கைகள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும்.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜி.எஸ்.டி.யால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜி.எஸ்.டி.க்கு மவுன அஞ்சலி செலுத்திட வேண்டும்.

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பணமதிப்பு காரணமாக நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது.

சுவிஸ் வங்கிகளில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி தொடரக்கூடாது. மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். நாம் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற புதிய செயலி அறிமுக விழாவில் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அழைப்பு விடுக்கப்படாத உறுப்பினர்கள் விழா பற்றி அறிந்தவுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நக்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்