இந்து முன்னணியின் பேனர்–கொடிகள் அகற்றம் திடீர் சாலை மறியல்; பரபரப்பு
புதுவை சாரத்தில் இந்து முன்னணியின் பேனர்–கொடிகள் திடீரென்று அகற்றப்பட்டன. இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் சாரம் அவ்வைத்திடலில் நேற்று மாலை தேச ஒற்றுமை மாநில மாநாடு நடந்தது. இதையொட்டி காமராஜர் சாலை முழுவதும் இந்து முன்னணியினர் கொடி மற்றும் பேனர்கள் கட்டி இருந்தனர். நேற்று காலை உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று இந்து முன்னணியின் கொடி மற்றும் பேனர்களை அகற்றினர்.
இது பற்றிய தகவல் அறிந்து இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்றனர். கொடி மற்றும் பேனர்களை அகற்றிய அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தையொட்டி தி.மு.க.வின் கொடி, பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை அகற்றவில்லை. ஆனால் தற்போது இந்து முன்னணியின் கொடி, பேனர்களை அகற்றுவது ஏன் என்று கேட்டனர். மற்ற நாட்களில் வேலை செய்யாத அதிகாரிகள் இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமையில் கூட வேலை செய்வது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக்கு இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், இப்போது நாங்கள் பேனர்களை மட்டும் எடுத்து விடுகிறோம். கொடி அப்படியே இருக்கட்டும். ஆனால் இதேபோல் மற்றவர்கள் கொடி, பேனர்கள் வைக்க அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதனைதொடர்ந்து அங்கு கட்டப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அங்கிருந்த கொடிகளையும் அகற்ற முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோரிமேடு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.