விளாங்காட்டூர் ரேஷன் கடையை தினந்தோறும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தாசில்தாரிடம், கிராம மக்கள் கோரிக்கை
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ரேஷன் கடையை தினந்தோறும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராம மக்கள் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விளாங்காட்டூர் பகுதியில் 780 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அதே பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் சமீப காலங்களாக மாதத்திற்கு 4 நாட்கள் மட்டுமே கடை திறக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெறுவதற்கு முந்தி கொண்டு செல்வதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவதியடைகின்றனர். ரேஷன் கடையை தினசரி திறக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த ரேஷன் கடையின் விற்பனையாளரிடம் விசாரணை நடத்தி தினந்தோறும் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.