சின்னசேலம் பகுதியில் திடீர் மழை: மின்னல் தாக்கி கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 2 மாடுகள் செத்தன

சின்னசேலம் பகுதியில் திடீர் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன.

Update: 2018-07-01 21:30 GMT

சின்னசேலம்,

சின்னசேலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. நேற்று காலையிலும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை தூர ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த திடீர் மழையினால் பொதுமக்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து, பூமி குளிர்ச்சியானது.

இந்த நிலையில் நயினார்பாளையம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி குமரப்பிள்ளை(வயது 60) என்பவர் தனக்கு சொந்தமான 2 மாடுகளை கொட்டகையில் கட்டியிருந்தார். நேற்று மதியம் மழை பெய்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் அந்த மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக செத்தன. மேலும் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. இதேபோல் உளுந்தூர்பேட்டை பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

மேலும் செய்திகள்