ஈரோட்டில் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு தொடங்கியது

‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-01 23:30 GMT
ஈரோடு,

ஈரோட்டில் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழ் மக்களின் உள்ளத்தோடும், உணர்வோடும் உறவாடி வெற்றி பெற்ற ஹலோ எப்.எம்.(106.4) சென்னையில் கடந்த 2006-ம் ஆண்டு தனது பண்பலை சேவையை தொடங்கியது. இதன் சரித்திர சாதனை வெற்றியை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, புதுவை ஆகிய இடங்களில் இருந்து ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் 42 லட்சம் நேயர்கள் விரும்பும் சிறந்த பண்பலை வானொலி என்ற பெருமையுடன், தனக்கென்று தனி இடம் பிடித்து தன்னிகரில்லாத வானொலியாக ஹலோ எப்.எம். திகழ்கிறது. புதிய பாடல்கள், பழைய பாடல்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களின் சூடான பேட்டி, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பேட்டி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களின் மத்தியில் ஹலோ எப்.எம்.அமோக வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், தற்போது ஈரோடு, சேலம் மற்றும் வேலூரில் நேற்று முதல் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. உள்ளூர் தொகுப்பாளர்களின் திறமையாலும், உணர்வுகளோடு உறவாடும் நிகழ்ச்சிகளாலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஹலோ எப்.எம். ஈரோடு, சேலம், வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களின் பேராதரவோடு பயணத்தை தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஹலோ எப்.எம். 92.7 பண்பலை அலைவரிசையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான தொடக்கவிழா நேற்று ஈரோடு பஸ்நிலையம் அருகே உள்ள ஹலோ எப்.எம். அலுவலகத்தில் நடந்தது. விழாவில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு ஒலிபரப்பை தொடங்கிவைத்தார். பிறகு ஹலோ எப்.எம். வானொலி ஒலிபரப்பு நிலையத்தை பார்வையிட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நிர்வாகிகளிடம் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கினார்.

இந்த விழாவில் ஹலோ எப்.எம். தலைமை செயல் அதிகாரி ராஜூ நம்பியார், மேலாளர் விஜயன், கோட்ட தலைமை அதிகாரி கோபுராஜ், ஈரோடு தினத்தந்தி மேலாளர் ஆர்.சுந்தர், மாலைமலர் மேலாளர் செல்வம், ஈரோடு ஹலோ எப்.எம். நிலைய தலைமை அதிகாரி கிரி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவையொட்டி ஈரோடு ஹலோ எப்.எம். நேயர்களுக்கு தங்கக்காசுகள் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஒவ்வொரு மணி நேரமும் 5 பேர் தங்கக்காசு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் உடனடியாக வானொலியில் அறிவிக்கப்பட்டது. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலரும் நேரடியாக ஹலோ எப்.எம். அலுவலகத்துக்கு வந்து தங்கக்காசுகளை பரிசாக பெற்றுச்சென்றனர். நேற்று ஒரே நாளில் 100 தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

ஹலோ எப்.எம். ஈரோடு மாவட்டத்தின் முதல் பண்பலை வானொலியாக தொடங்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழுவதும் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பலை வானொலியாக ஹலோ எப்.எம். திகழவேண்டும் என்று நேயர்கள் பலரும் கூறினார்கள். ஹலோ எப்.எம். ஈரோட்டில் தொடங்கப்பட்டதை தொடர்ந்து எப்.எம். ரேடியோக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் அதிகரித்து இருப்பதாக ரேடியோ விற்பனையாளர் ஒருவர் கூறினார். இதுபோல் செல்போன்களில் 92.7 அலைவரிசையில் ஹலோ எப்.எம். நிகழ்ச்சிகளை ஏராளமானவர்கள் கேட்டு ரசித்ததை பல பகுதிகளிலும் பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்