காற்றில் இருந்து குடிநீர்
நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் எதிர் காலத்தில் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் எதிர் காலத்தில் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மழை பொழிவை நம்பித்தான் நீர் ஆதாரம் அமைந்திருக்கிறது. அதனால் வறட்சியான சமயங்களில் வளி மண்டலத்தில் மழை மேகங்களை ஒன்று திரள வைத்து செயற்கை மழை பொழிய வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் வளிமண்டலத்தில் இருக்கும் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முயற்சியில் ஐதராபாத் நிறுவனம் வெற்றி கண்டிருக்கிறது. அங்குள்ள இந்தியன் கெமிக்கல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (ஐ.ஐ.சி.டி) சார்பில் ஏ.டபிள்யூ.ஜி எனப்படும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் வளிமண்டத்தில் உள்ள காற்றில் கலந்திருக்கும் மாசுக்களை சுத்தம் செய்து ஈரப்பதத்தை வரையறை செய்கிறது. பின்னர் அதிக வெப்பநிலையில் காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை நீராக உருமாற்றி விடுகிறது. தினமும் 1000 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சோதனை முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயந்திரங்களை ஆகஸ்டு மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த இயந்திரங்கள் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு லிட்டர் குடிநீரை 2 ரூபாய்க்கு வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த குடிநீர் நிலத்தடி நீரை விட சுகாதாரமானது என்கிறார்கள் ஐ.ஐ.சி.டி. விஞ்ஞானிகள்.
‘‘நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் குடிநீரில் நைட்ரேட்டுகள், புளூரைடு, ஆர்ஜெனிக், நுண்ணுயிர்கள் கலந்திருக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளாலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அதனால் அதன் தூய்மை கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தூய்மையான குடிநீருக்கான நிரந்தர தீர்வாக வளிமண்டத்தில் இருந்து பெறப்படும் நீர் அமைந்திருக்கும். வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த குடிநீர் வரப்பிரசாதமாகவும் அமையும்’’ என்கிறார்கள்.