கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி சாவு

நத்தக்காடையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-06-30 23:26 GMT
முத்தூர்,

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நத்தக்காடையூர் அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள பொது கிணற்றின் தடுப்புச்சுவரின் மீது அமர்ந்திருந்தார். சுமார் 75 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென்று நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து காங்கேயம் போலீஸ் நிலையத்துக்கும், காங்கேயம் தீயணைப்பு துறைக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்சன் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி சக்திவேலின் உடலை தேடினார்கள். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்களால் உடலை எடுக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை சுமார் ஒரு மணிநேரம் போராடி சக்திவேலின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு காங்கேயம் தாசில்தார் மாணிக்கவேலு, வருவாய் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்