தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று எடப்பாடியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-06-30 23:07 GMT
சேலம்,

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மல்லியகரை, கருப்பூர் புதிய கிளைகள் தொடக்க விழா, கருப்பூர் புதிய காவல் நிலையம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதியம் நடந்தது. விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், வெற்றிவேல், ராஜா, மனோன்மணி, மருதமுத்து, சின்னதம்பி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 53 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற 13 பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மக்கள் ஆதரவோடு 30.6.1977-ல் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுபேற்ற நாள். அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற மக்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் 15 ஆண்டுகள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றது. ஏழை, எளிய மக்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டது. தற்போது அவரது மறைவுக்கு பின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர் விட்டு சென்ற பணிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 100-க்கு 65 சதவீதம் பேர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் படும் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். நவீன வேளாண் கருவிகள், மானிய கடன், சொட்டுநீர் பாசன கருவி, பயிர்க்கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஒரு அரசு, விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ? அதை செய்து வருகிறது.

இதுதவிர, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், விலையில்லா கால்நடைகள் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அத்தனை திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற காரணங்களுக்காக தி.மு.க.உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறைகளை கூறி வருகிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்க்க முடியவில்லை. இதனால் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாநகர் மட்டுமின்றி தம்மம்பட்டி, ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. மேலும், மாவட்ட சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள சாலைகளை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதை பயன்படுத்தி நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழக விவசாயிகளின் நீண்டநாள் பிரச்சினையை தீர்க்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இனிமேல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் கிடைத்தே தீரும். அதன்மூலம் பல மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதோடு, பல லட்சம் ஏக்கரில் விவசாயிகளின் விளைநிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் இந்த ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதைத்தொடர்ந்து ரூ.32 கோடியே 12 லட்சம் மதிப்பில் 5 ஆயிரத்து 654 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், சேலம் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் வழியாக டேனிஷ்பேட்டைக்கு புதிய வழித்தட டவுன் பஸ் சேவையை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், முன்னாள் துணைத்தலைவர் ராமு, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஸ், ஒன்றிய செயலாளர்கள் மாதேஸ்வரன், ராஜேந்திரன், எமரால்டு வெங்கடாசலம், பூலாம்பட்டி பாலு, ஆவின் துணைத்தலைவர் ஜெயராமன், நகர நிர்வாகிகள் நாராயணன், முருகன், செங்கோடன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் பொறியாளர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், எடப்பாடி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், பொறியாளர்கள் துரைசாமி, மலர்விழி, ஒப்பந்ததாரர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்