எனக்கு மிகவும் பிடித்த தம்பி ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்’

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் என்றும், அவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி என்றும் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

Update: 2018-06-30 22:30 GMT
சென்னை,

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் என்றும், அவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி என்றும் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் 28-ந்தேதி ‘வணக்கம் டுவிட்டர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டுவிட்டரில் ரசிகர்கள், பொதுமக்கள் கமல்ஹாசனிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு அப்போது அவர் பதில் அளித்தார்.

இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு 2-வது நாளாக நேற்றும் பதில் அளித்து இருக்கிறார். அதில் இடம்பெற்று இருந்த சில முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள் வருமாறு:-

கேள்வி:- உங்களின் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா?

பதில்:- எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.

கேள்வி:- உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரிலீஸ் செய்யனும்... (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)... செய்வீர்களா?

பதில்:- நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது.

கேள்வி: அடுத்த தலைமுறைக்கு சாதியை நீங்கள் எப்படி எடுத்து சொல்லப்போகிறீர்கள்? பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் அது கட்டாயம் இருக்குமா?

பதில்:- எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்த்தபோது விண்ணப்பத்தில் சாதி, மதத்தை குறிப்பிட நான் மறுத்துவிட்டேன். இது அப்படியே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போகும். அதுதான் சாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி. இதை ஒவ்வொரு தனி மனிதரும் செய்யவேண்டும். இதை கேரளா அமல்படுத்த ஆரம்பித்துவிட்டது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கேள்வி:- கேரளாவின் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது. சமீபத்தில் லாரி முழுவதும் மருத்துவ கழிவுகளை பிடித்தார்கள். உங்கள் நண்பரான கேரள முதல்-மந்திரியிடம் கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா?

பதில்:- நான் ஏற்கனவே இதுதொடர்பாக அவரிடம் பேசிவிட்டேன். இதுபற்றி மறுபடியும் பேசுகிறேன். இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

கேள்வி:- நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது?

பதில்:- நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், ‘பூணூல்’ அதனாலேயே அதை தவிர்த்தேன்.

கேள்வி:- ‘ஒரு முகத்து மேல இன்னொரு முகத்த போஸ்டரா ஒட்ட முடியாது’ என்று சொன்ன நீங்கள், பாரதியார் ஆக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை உங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வச்சிருக்கீங்க. இதற்கு பிரத்தியேக காரணம் ஏதும் உண்டா?

பதில்:- எனது தகப்பன் முகத்தை என் முகத்தில் பொருத்தி பார்ப்பதில் தவறில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்