ஏர்வாடி வனப்பகுதியில் பறவைகளை வலைவிரித்து பிடித்த 4 பேருக்கு அபராதம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வனப்பகுதியில் பறவைகளை வலைவிரித்து பிடித்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2018-06-30 21:45 GMT

ராமநாதபுரம்,

கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா தலைமையில் வனவர் சுதாகர், வனகாப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொம்பூதி கண்மாய் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பறவையினமான 4 பட்டை கழுத்து புறாக்கள் இருந்தது தெரிந்தது.

அந்த பகுதியில் வலைவிரித்து இந்த புறாக்களை பிடித்தது தெரியவந்தது. அந்த புறாக்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் விசாரணை செய்தபோது திருப்புல்லாணி இந்திராநகரை சேர்ந்த பாக்கியம் மகன் வீரன் (வயது 35) என்பது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட பறவைகளை வலைவிரித்து பிடித்த குற்றத்திற்காக வீரனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்பின்னர் பிடிபட்ட புறாக்களை வனத்துறையினர் அந்த பகுதியில் உள்ள காட்டுக்குள் பறக்கவிட்டனர்.

தொடர்ந்து வனத்துறையினர் அந்த வழியாக காட்டுப்பகுதிக்குள் ரோந்து சென்றபோது மேலும் 3 மர்ம நபர்கள் வலைவிரித்து தடைசெய்யப்பட்ட பறவைகள், வனஉயிரினங்களை பிடித்து கொண்டிருந்ததை கண்டு அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு முயல் மற்றும் கவுதாரி பறவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கிழக்கு மங்களேஸ்வரி நகரை சேர்ந்த முனியசாமி (22) மற்றும் சின்னமாயாகுளம் நம்புராஜ்(23), அவரின் தந்தை செல்வம்(45) ஆகியோரை பிடித்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். பிடித்து வைக்கப்பட்டிருந்த முயல் மற்றும் கவுதாரி ஆகியவற்றை வனப்பகுதிக்குள் பத்திரமாக திருப்பி விட்டனர்.

மேலும் செய்திகள்