அறிவிப்போடு நின்று விட்ட நவீனப்படுத்தும் திட்டம்: அழிவை நோக்கி நகரும் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்டு ஆலை நவீனப்படுத்தப்படும் என கடந்த 30 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு வந்த போதிலும் தற்போது அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் இந்த ஆலைக்கு மீண்டும் உயிரூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2018-06-30 22:45 GMT

விருதுநகர்,

தென் மாவட்டங்களை தொழில் மயமாக்க வேண்டும் என மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுடன் அதற்கான தொலை நோக்கு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் விருதுநகரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் அந்த பணியும் தொடர முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் ஆலங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சிமெண்டு ஆலை படிப்படியாக செயல் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் தனியார் துறை சார்பில் நெல்லை மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டத்திலும் சிமெண்டு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு சிமெண்டு நிர்வாகத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலை நிறுவப்பட்டு ஈரப்பத தொழில்நுட்ப அடிப்படையில் சிமெண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சிமெண்டு ஆலைகள் உலர்முறை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உற்பத்தியை தொடங்கிவிட்ட நிலையில் இந்த அரசு ஆலை மட்டும் இன்னும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த ஆலை நவீனப்படுத்தப்படும் என கடந்த 30 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தொழில்துறை அதிகாரிகள் அறிவித்து வந்து போதிலும் அந்த அறிவிப்புகள் செயலாக்கம் பெறவில்லை.

தொடக்கத்தில் 3,000 தொழிலாளர்கள் வரை வேலை வாய்ப்பு தந்த இந்த நிறுவனத்தில் தற்போது 80 நிரந்தர தொழிலாளர்களும், 150 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் தொழில்துறை மானிய கோரிக்கைகளின் போது பல முறை இந்த தொழிற்சாலை நவீனப்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மேலும் இம்மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சட்டமன்ற மனுக்கள் குழு, பொதுக்கணக்கு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஆலையினை நவீனப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்து சென்றன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் உதவியுடன் ரூ.550 கோடியில் இந்த ஆலை நவீனப்படுத்தப்படும் என தமிழக அரசின் தொழில்துறை அறிவித்தது. ஆனாலும் இந்த ஆலையை நவீனப்படுத்த ஆலையின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு சிமெண்டு நிறுவனம் நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு சிமெண்டு நிறுவன நிர்வாகத்தின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் ஆலையை நவீனப்படுத்த ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை அரியலூர் ஆலைக்கு மாற்றியதாக அப்போது தகவல் வெளியானது. ஆனாலும் அரியலூர் ஆலையை நவீனப்படுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு மறுமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ரூ.1,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு நவீனப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தி பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு ஆதரவு கரம் நீட்ட யாரும் தயாராக இல்லாத நிலையில் ஆலை அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் தவித்து வரும் இந்த மாவட்டத்தில் வறட்சியால் விவசாயமும் தொடர்ச்சியாக மக்களை வஞ்சித்து வருகிறது. ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஆலங்குளம் சிமெண்டு ஆலையினை நவீனப்படுத்தி இம்மாவட்ட இளைஞர்களுக்கு நேரடியாகவும், கிராம மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தருவதன் மூலம் மாவட்டத்தின் மேற்கு பகுதி பொருளாதாரம் மேம்பாடு அடையவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த ஆலையை நவீனப்படுத்தாமல் அறிவிப்போடு மத்திய, மாநில அரசுகள் நிறுத்திவிட்டதற்கு வேறு உள்நோக்கங்கள் ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இம்மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு உயிரூட்ட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்