கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார் சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு
பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் எளம்பலூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தார் சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். கோல்டன் சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால்
லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நண்பர், பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு பழக்கமானவர். இதனால் அவர் மூலம், கோல்டன் சிட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை மனுவுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கோல்டன் சிட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார்.
அந்த நிதியின் மூலம் கோல்டன் சிட்டி பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலையானது 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ. தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு அடுக்காக தார் சாலை போடப்பட உள்ளது. இச்சாலை இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது, என்றார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், முரளிதரன், ஒன்றிய பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கோல்டன் சிட்டி பகுதியில் தார் சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்த
சச்சின் தெண்டுல்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.