அந்தியூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

அந்தியூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-30 22:30 GMT
அந்தியூர்,

அந்தியூர் பஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் அய்யப்பன் (வயது 30). விவசாயி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தியூர் கண்ணப்பன் கிணற்று வீதியில் சென்றபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அய்யப்பனை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் அவரிடம், ‘உன்னிடம் இருக்கும் பணத்தை எடு’ என்று கத்தியை காட்டி மிரட்டினார்கள். இதனால் பயந்து போன அவர் தன்னுடைய சட்டைப்பையில் இருந்த ரூ.100-யை எடுத்து கொடுத்தார். அதன்பின்னர் மர்மநபர்கள், அய்யப்பனிடம் செயின், மோதிரத்தை கழற்றி கொடுக்குமாறு கூறினார்கள். இதனால் அவர் “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார்கள். அவர்களை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், அந்தியூர் பெரியார்நகரை சேர்ந்த சுபாகன் (32), பவானியை சேர்ந்த தவசியப்பன் மகன் யுவராஜ் (33) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அந்தியூர் பகுதியில் மற்றொரு வழிப்பறி சம்பவம் நடந்தது. அந்தியூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவர் அருகே உள்ள காந்தி மைதானத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அந்தியூர் சிங்கார வீதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (35) என்பவர் கோவிந்தராஜை கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அந்த நபரை பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்