மோடியும், பட்னாவிசும் சர்வாதிகாரிகள் சிவசேனா கடும் தாக்கு

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி சர்வாதிகாரத்தில் ஈடுபடுவதாக சிவசேனா கட்சி கடுமையாக தாக்கியுள்ளது.

Update: 2018-06-30 00:27 GMT
மும்பை,

ரத்னகிரி மாவட்டம் நானார் பகுதியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு மராட்டிய அரசு சவுதி அரேபிய நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த பெட்ரோலிய திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, நானார் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சியான சிவசேனா உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் இதனை எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகா ரப்பூர்வ பத்திரிகை யான ‘சாம்னாவில்’ இது குறித்து கூறியிருப் பதாவது:-

பிரதமர் மோடி மத்திய மற்றும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் அமைச்சகங்களை இழுத்து மூடவேண்டும். ஏனெனில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகையில் அரசின் விஷம் நிறைந்த திட்டங்கள் அவர்களது செயல்பாடுகளை தடுக்கிறது.

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பட்னாவிஸ் சர்வாதிகாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சர்வாதிகாரிகளாக இருக்க விரும்புகையில் நெருக்கடிநிலைக்கு எதிராக குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாதபோது அது சர்வாதிகாரமாகவே கருதப்படும்.

மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்து கொண்டு நானார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு பின்னர் மும்பை வந்து ஆதரவு கோருகிறார். இது துரோகம் ஆகும். நானார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் ஒவ்வொரு செங்கல்லும் இங்கு புற்றுநோய்க்கு அடித்தளம் அமைப்பதற்கு ஒப்பானது. மக்கள் மீது இந்த திட்டத்தை திணிப்பதும் நெருக்கடிநிலை பிரகடனத்தை அமல்படுத்துவதும் ஒன்றே ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்