முறையான அறிவிப்பு செய்த பின்னர் பி.ஏ.பி.கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

முறையான அறிப்பு செய்த பின்னர் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-29 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

இதில் விவசாயி ராமநாதன் பேசியதாவது “ பி.ஏ.பி. கால்வாயில் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் முறையாக தண்ணீர் திறப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் நேரம் தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் திறப்பு நேரம் குறித்து முறையாக தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அந்த நீரை வீணாகாமல் பயன்படுத்த முடியும். விவசாயத்தை பாதுகாக்க முடியும்” என்றார். இதே கோரிக்கையை பல்வேறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

ஈஸ்வரன்:- “நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும் போது சாமளாபுரம் குளம் நிறைகிறது. அதுபோல் பள்ளபாளையம் குளங்களும் நிரம்புகின்றன. இதன் பின்னர் இந்த உபரிநீர் மீண்டும் நொய்யலுக்கு செல்கிறது. இதனால் பரமசிவம்பாளையத்தில் சிறிய தடுப்பணை கட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர். எனவே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வர மூர்த்தி:- “விவசாயிகளுக்கு முக்கியமான கால கட்டத்தில் பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட சுலபமாக இருக்கும். கடன் வழங்கப்படாமல் இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கடன் பெற்றிருந்தாலும் கரும்பு விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பாலதண்டாயுதம்:- “உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் மின்மாற்றி பழுதடைந்ததால் மோட்டார் போட முடியவில்லை. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்தட்டுப்பாட்டை போக்கி கால் நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மதுசூதனன்:- “பயிர் காப்பீட்டில் ஏராளமான விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமல் உள்ளது. பி.ஏ.பி. திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து 3¾ லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. வடபூதிநத்தம் பகுதியில் குழாய்கள் மூலம் முறைகேடாக தண்ணீர் திருடப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் பி.ஏ.பி. திட்டம் பாதிப்படைகிறது. எனவே நல்லாறு அணைத்திட்ட பணிகளை உடனே தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

ராஜாமணி:- “தென்னை விவசாயத்தில் பிரதான மாவட்டமாக உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணிக்காக தென்னைக்கு ரூ.80 ஆயிரம் வழங்க கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார். மேலும், இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் பின்னர் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கமளித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஷ் பச்சாவு, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) தமிழ்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியார் (வேளாண்மை) அரசப்பன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்