ஏரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் மாவட்ட ஏரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-06-29 23:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் பின்வருமாறு:-

விவசாயி சுந்தரம்:-ஓ.சவுதாபுரம் ஏரியை ஆக்கிரமித்து சிலர் தென்னை நடவு செய்தும், கிணறு வெட்டியும், குடிசை அமைத்தும் உள்ளனர். இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீர் வரட்டாறு வழியாக காளப்பநாயக்கன்பட்டி ஏரிக்கு வருகிறது. வரட்டாற்றில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கலெக்டர் ஆசியா மரியம்:- ஒரு வார காலத்திற்குள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையெனில், சேந்தமங்கலம் தாசில்தார் ,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சரவணன்:- வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத்தை ஒரு சிலரே தொடர்ந்து பெற்று வருகின்றனர். மானிய திட்டங்கள், மானியம் பெறுபவர்களின் விவரம் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இந்த விவரங்களை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். ஆனால் 2 ஆயிரத்திற்கும் குறைவான விவசாயிகளே உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர். அனைத்து விவசாயிகளும் இந்த செயலியை பயன்படுத்தும் நிலையை வேளாண் அலுவலர்கள் உருவாக்க வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தங்கவேல்:- ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு கால்நடை மருத்தகங்களுக்கு கால்நடை டாக்டர்கள் வருவதில்லை. சோழசிராமணியில் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டி அலுவலர்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியசாமி:- ராஜவாய்க்கால் பாசன பகுதியில் உள்ள வாழை, வெற்றிலை, கோரை பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு முடிவடைந்து உள்ளது. பிரதான மற்றும் கிளை வாய்க்கால்களில் வெங்கரை, பாண்டமங்கலம், மோகனூர் பேரூராட்சி கழிவுகள் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைவதோடு, நீரோட்டமும் தடைபடுகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- ராஜ வாய்க்காலில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சப்-கலெக்டர் தலைமையில் மாதம்தோறும் ராஜவாய்க்கால் விவசாயிகள் கூட்டத்தை நடத்தவும். 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெய்ஞானமூர்த்தி:- வேளாண் பொறியியல் துறை மூலம் ராசிபுரத்தில் வேளாண் கருவிகள், எந்திரங்கள் வாடகைக்கு விடும் மையத்தை அமைக்க வேண்டும். விவசாயிகள் அல்லாத பலர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் முதல் வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இதனை ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களை முதல் வகுப்பு உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும்.

கலெக்டர்:- கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல் விவசாயிகள் பலர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்து விளக்கங்களை பெற்றனர்.

மேலும் செய்திகள்