புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே உதவி பேராசிரியர் பணியிடங்களை வழங்கவேண்டும், நாராயணசாமியிடம் கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உதவி பேராசிரியர் பணியிடங்களை வழங்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாரயணசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநில மக்கள் உரிமை பேரவை தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான உதவி பேராசிரியர்கள் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது மத்திய தேர்வாணையம் நிர்ணயித்த தகுதி அடிப்படையிலான பி.எச்.டி., நெட் ஆகிய உயர்படிப்பு முடித்த தகுதிவாய்ந்த 675 இளைஞர்கள் புதுவை மாநிலத்தில் வேலைவாய்ப்பின்றி இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் மத்திய தேர்வாணையம் புதுவை மாநில அரசு கல்லூரி பணியிடங்களுக்காக 141 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்தது. அதில் 10 பேர் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள். அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்க சேரும் புதுவை மாநில மாணவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு என தங்கள் தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி பயின்றவர்கள். அவர்கள் கல்லூரி படிப்பினை தங்களுக்கு தெரிந்த மொழியில் பயிற்றுவிக்கும் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் ஆசிரியர்கள் பேசுவதை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியாமலும், மாணவர்கள் சொல்வதை உதவி பேராசிரியர்கள் புரிந்துகொள்ள முடியாமலும் உள்ள சூழல் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறது. இந்தநிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர் நியமனங்கள் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக அறிகிறோம்.
எனவே பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய தேர்வாணைய விதிகளுக்கு உட்பட்டு உயர்படிப்பு படித்து புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அறிந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு மட்டும் ஒப்பந்த உதவி பேராசிரியர் பணியிடங்களை வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.